திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் ரவுண்டானா, உயர் கோபுர மின்விளக்கு இல்லாமல் உள்ள கொட்டமேடு சந்திப்பு: வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கொட்டமேடு சாலை சந்திப்பில் சிக்னல், ரவுண்டனா, உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் கொட்டமேடு சந்திப்பு உள்ளது. இங்கிருந்து மயிலை, கீழூர், தருமாபுரி, நெல்லிக்குப்பம், எடர்குன்றம், பூண்டி உள்பட பல கிராமங்களுக்கு  சாலைகள் செல்கின்றன. பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த சாலை உள்ளது. இதனால்  ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

சமீபத்தில், செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே உள்ள இரு வழிப்பாதை ரூ120 கோடி மதிப்பீட்டில் 4 வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சாலையோரம் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, சாலை 200 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்துடன் பயணிக்கின்றன. குறிப்பாக சாலையின் நடுவே சாலை தடுப்பு இல்லை. வாகனங்கள் வேகமாக வந்து திரும்புவதாலும் போக்குவரத்து சிக்னல், வேகத்தடை ஆகியவை அமைக்கப்படாததாலும் வாகனங்கள் தினமும் விபத்தை சந்திக்கின்றன. இதையொட்டி, ஒருவித அச்சத்துடன் கொட்டமேடு சந்திப்பை வாகனங்கள் கடக்கும் நிலை உள்ளது.

சாலையோர மரங்கள், அகற்றப்பட்டுவிட்டதால் நிழலுக்கு ஒதுங்கி நிற்கவும் வழியில்லை. மேலும் இந்த சாலை விரிவாக்கப்பணியின்போது பஸ் நிறுத்த நிழற்குடைகளும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சாலையிலேயே நிற்கவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சாலையின் நடுவிலோ அல்லது சாலை ஓரங்களிலோ மின்விளக்குகள் இல்லை. இதனால் மாலை 6 மணிக்குமேல் இப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருப்போர் மிகுந்த பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருதுகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கொட்டமேடு சந்திப்பில் ரவுண்டனா அமைத்து கிராமங்களின் பெயர் பலகை மற்றும் தூர அறிவிப்பு பலகைகளை அமைக்கவேண்டும். சாலையின் நடுவே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>