சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: கணக்கில் வராத ரூ2 லட்சம் சிக்கியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ2,02,300 பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அருகே சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. இதன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் மாலை மேற்கண்ட அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள், நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடத்திய சோதனையில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனியிடம் கணக்கில் வராமல் இருந்த ரூ1,66,910 ரொக்கம்,

பெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசனிடம் ரூ26,490 ரொக்கம், காஞ்சிபுரம் வட்டார சுகாதார அலுவலர் இளங்கோவிடம் ரூ8,900 என மொத்தம் கணக்கில் வராத ரூ2,02,300 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த பணம் தொடர்பாக, எவ்வித ஆவணங்களும் இல்லாததால் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Related Stories:

More
>