இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் காதல்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிவந்த பெண் தற்கொலை: ராமநாதபுரம் ஜி.ஹெச்சில் தூக்கில் தொங்கினார்

ராமநாதபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலையில் விழுந்த 2 குழந்தைகளின் தாய், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவருக்கு ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை அருகே கொம்பூதியைச் சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரி விஐயன் (31) என்பவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது.

ஐஸ்வர்யா திருமணம் ஆனவர் என்பது தெரியாமலே விஜயன், அவரை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதையடுத்து, விஜயனை தேடி, ஐஸ்வர்யா கடந்த 16ம் தேதி ராமநாதபுரம் வந்தார். அவரை ராமநாதபுரம் அருகே எல்.கருங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, விஜயன் அழைத்துச் சென்றார். பதிவு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக அவரது ஆதார் கார்டை கேட்டபோது கொடுக்காமல் தாமதித்து வந்தார்.

ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு ஆதார் கார்டை எடுத்து வர கூறியபோது தான், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. மேலும் ஜஸ்வர்யாவை காணவில்லை என அவரது கணவர் திருச்செந்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ள விவரமும் விஜயனுக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஐயன், தனது உறவினர்கள் உதவியுடன் ஐஸ்வர்யாவை ராமநாதபுரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்தபோது, கணவருடன் செல்ல விரும்பவில்லை, விஜயனுடன் வாழ விரும்புவதாக கூறினார்.

இதையடுத்து திருச்செந்தூர் போலீசாரிடம் ஐஸ்வர்யாவை ஒப்படைக்க முடிவு செய்த ராமநாதபுரம் மகளிர் போலீசார், ஒரு நாள் இரவு மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல ஆலோசனை பிரிவில் தங்க வைத்தனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள கழிப்பறையில் ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். அவரது உடலை அரசு மருத்துவமனை போலீசார் மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: