கரும்புள்ளி பட்டியலில் காவலர் ரத்து செய்தது ஐகோர்ட் கிளை: பதவி உயர்வு வழங்கவும் உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த தீனதயாளன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு காவல்துறையில் 1999ல் பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வு பெற்று கிரேடு 2 காவலராக இருந்தேன். 2008ல் எனது முன்னாள் மனைவி கொடுத்த வரதட்சணை புகாரின் பேரில் நான் கைதானது குறித்து எனக்கு மெமோ வழங்கப்பட்டது. இதற்கு நான் விளக்கமளித்தேன். என் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரியின் பரிந்துரையின்பேரில் ஓராண்டுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து ஆயுதப்படை துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்த எனது அப்பீலை ஐஜி நிராகரித்தார். இதை எதிர்த்து டிஜிபியிடம் சீராய்வு மனு செய்தேன். இதில், எனக்கான தண்டனையை மாற்றியமைத்த டிஜிபி, என்னை கரும்புள்ளி பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த எனது கருணை மனுவை உள்துறை முதன்மை செயலாளர் நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘‘காவலர் மீதான வரதட்சணை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முழுமையாக நடத்தப்பட்டு மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதை கருத்தில் கொள்ளாமல் தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரது எதிர்கால பலன்கள் பாதிக்கப்படுகின்றன’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘அரசு பொது ஊழியர் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக்கூடாது. மனுதாரர் மீதான குற்ற வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த குற்றவழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை மறுக்க முடியாது. விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் நன்னடத்தையை மீறிவிட்டார் எனக்கூற முடியாது.

மனுதாரருக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு இளைய நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய காலத்தை கணக்கிட்டு, 12 வாரத்திற்குள் தலைமைக்காவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>