அரியானா போலீஸ் அதிரடி நடவடிக்கை: சாதி அவதூறு புகாரில் நடிகை கைது

சண்டிகர்: சாதி அவதூறு புகாரில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீஸ் கைது செய்தது. அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் அளித்த புகாரில், ‘நடிகை யுவிகா சவுத்ரி வெளியிட்ட வீடியோவில், குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு, சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, யுவிகா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திடீரென்று இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது. உடனே யுவிகா சவுத்ரி தனது சமூக வலைத்தள பதிவில், ‘நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து விடப்பட்டுள்ளன. யார் மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அரியானா உயர் நீதிமன்றத்தில் யுவிகா சவுத்ரி சார்பில், போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, யுவிகா சவுத்ரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அரியானாவில் வசிக்கும் யுவிகா சவுத்ரியை நேற்று முன்தினம் ஹன்சி போலீசார் கைது செய்தனர். சில மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 

Related Stories:

More
>