×

10 மற்றும் 12ம் வகுப்புக்கான முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ அட்டவணை வெளியீடு: தேர்வு நடத்தும் முறையில் மாற்றம்; தேர்வு எழுத 36 லட்சம் மாணவர்கள் பதிவு

சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, முதல் பருவத் தேர்வு அட்டவணை வெளியானது. நாடு முழுவதும் 36 லட்சம் மாணவ மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவியருக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிகள் 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததால், ஆன்லைன் மூலம் மாணவ மாணவியர் பாடங்களை படித்து வந்தனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தினால், மாணவ- மாணவியர் தேர்வு எழுத சிரமப்பட நேரிடும். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2 கட்டங்களாக தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வை நாடு முழுவதும், 36 லட்சம் மாணவ- மாணவியர் எழுதுகின்றனர். இது, கடந்த ஆண்டைவிட 4 லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தற்போது தேர்வு எழுத பதிவு செய்துள்ளவர்களில் 50 சதவீதம் பேர் முதற்கட்ட( முதல் பருவம்) தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் எழுத உள்ளனர்.

இதையடுத்து, முதற்கட்ட தேர்வுக்கான அட்டவணையை, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, 10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்க உள்ளன. இந்த தேர்வுகள் கொள்குறி வகையிலான கேள்விகளை கொண்டதாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளதால், 7ஆயிரமாக இருந்த தேர்வு மையங்களை 14 ஆயிரமாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது.

10ம் வகுப்பில் 22 லட்சம் மாணவ- மாணவியர் ஓஎம்ஆர் அடிப்படையிலான விடைத்தாள்களில் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, 14 லட்சம் மாணவ- மாணவியர் 12ம் வகுப்பில் தேர்வு எழுத உள்ளனர். கடந்த, 2020ம் கல்வி ஆண்டில் இடம் பெற்ற பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது கொள்குறி வினாக்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் முதற்கட்ட தேர்வு 90 நிமிடங்களும் இரண்டாம் கட்ட தேர்வு120 நிமிடங்களும் நடக்கும். இது  தவிர இரண்டு கட்ட தேர்விலும் செய்முறைத் தேர்வுகள் இடம் பெறும். முதற்கட்டத்துக்கான செய்முறைகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

* சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கும் போது கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாளின் முகப்பில் குறிப்புகள் எழுதவும் வழக்கமாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதற்கு பதிலாக இந்த ஆண்டு தேர்வில் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.
* குளிர் காலத்தில் தேர்வுகள் தொடங்குவதால் காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுகள் காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும்.
* முக்கியம் இல்லாத பாடங்களுக்கான தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நவம்பர் 17ம் தேதி முதல் தனியாக நடத்தப்படும்.

* 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
நவம்பர் 30    சமூக அறிவியல்
டிசம்பர் 2    அறிவியல்
டிசம்பர் 3    மனையியல்
டிசம்பர் 4    கணக்கு, அடிப்படை கணக்கு
டிசம்பர் 8    கணினி அறிவியல்
டிசம்பர் 9    இந்தி-ஏ, இந்தி -பி
டிசம்பர் 11    ஆங்கிலம் (மொழி, இலக்கியம்)

* 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 1    சமூகவியல்
டிசம்பர் 3    ஆங்கிலம்
டிசம்பர் 6    கணக்கு
டிசம்பர் 7    உடற்கல்வி
டிசம்பர் 8    வணிகக் கல்வி
டிசம்பர் 9    புவியியல்
டிசம்பர் 10    இயற்பியல்
டிசம்பர் 11    உளவியல்
டிசம்பர் 13    கணக்குப்பதிவியல்
டிசம்பர் 14    வேதியியல்
டிசம்பர் 15    பொருளாதாரம்
டிசம்பர் 16    இந்தி விருப்பப் பாடம்,
இந்திய பிரதானபாடம்
டிசம்பர் 17    அரசியல் அறிவியல்
டிசம்பர் 18    உயிரியல்

Tags : CBSE , Release of CBSE Schedule of First Term Examination for Classes 10 and 12: Change in Examination System; 36 lakh students enrolled to write the exam
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...