×

தமிழக ஆளுநருடன் எடப்பாடி இன்று சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் நடந்த  ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 5% இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இல்லை. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக அதிமுக கட்சி தலைமை குற்றம் சாட்டியது. அதிமுகவின் இந்த அறிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது. இந்த சோதனைக்கும் அதிமுக கட்சி தலைமை கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே, தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, நடந்த முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பற்றி எடப்பாடி பழனிசாமி புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரும் செல்கிறார்கள். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Edappadi ,Governor ,Tamil Nadu , Edappadi meets Governor of Tamil Nadu today
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...