அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உயர்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்ணா பல்கலை கழகத்தின் புதிய துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பொறியியல் கல்வியை மேம்படுத்த பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவீன அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்.28ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தின் 263வது சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அரசாணைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதற்கு சிண்டிக்கேட் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் குழுவின் அனுமதியுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு அதன் பின்னர் முறைப்படி அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று கூறினார். இந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>