×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர், சென்னை உட்பட 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் இருந்து கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள சொத்து மதிப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 10 மடங்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021 பிரிவு 13(2),13(1)(பி), 2018 மற்றும் 12,13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர்.
ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.

இதனால் தற்போது நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே வரும் 12 தேதிக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் உள்ளிட்டோர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும் போது சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், சொத்துக்கள், வங்கி கணக்குகளுக்கான ஆவணங்களை எடுத்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Former Minister ,MR Vijayabaskar , Ex-minister MR Vijayabaskar summoned to appear in person on 25th
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...