காதல் திருமணம் செய்த விவகாரம் தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி குழந்தைகளுடன் கைது: தொடர் சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீஸ் நடவடிக்கை

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்டதால், சொத்தில் பங்கு கொடுக்காமல் விரட்டியடிப்பதாக காதல் தம்பதி ஒன்று தங்களது குழந்தைகளுடன் தலைமை செயலகத்தில் மனு கொடுக்க வந்தபோது, திடீரென தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோல் தொடர் சம்பவங்களில் இந்த தம்பதிகள் ஈடுபட்டு வந்ததால் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்க ஒரு தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் வந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே வந்தவுடன், திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்த குழந்தைகள் மற்றும் தங்களது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் தற்கொலைக்கு முயன்ற தம்பதி மற்றும் 2 குழந்தைகள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற தம்பதியை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி தற்கொலைக்கு முயன்ற தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்வள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் என்றும், இவர் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்டதால் சசிகலாவின் தந்தை அண்ணாதுரையை, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிலர் தூண்டுதலால் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சசிகலா தந்தை தனது பிள்ளைகளுக்கு சொத்தை சமமாக பிரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சகிகலாவுக்கும் சொத்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சொத்துக்களை வழங்காமல் கடன் கொடுத்தது போல் ஆவணம் தயார் செய்து அந்த கடனுக்கு அதே ஊரை சேர்ந்த பூபதி, வாசு, சங்கர் ஆகியோர் ஏற்றுக்கொண்டதாக கூறி ஏமாற்றுகின்றனர்.

இதுகுறித்தும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்தது தெரியந்தது. அதேநேரம் இதே தம்பதி கடந்த 7ம் தேதி தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து கோட்டை போலீசார் தற்கொலைக்கு முயன்ற தம்பதி மீது ஐபிசி 285, 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  தம்பதி கடந்த 7ம் தேதி தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Related Stories:

More
>