தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு தங்கம் காசுகள் கொள்முதலில் டெண்டர் விதிகளை மீறிய நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசின் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கான தங்க காசுகள் சப்ளை செய்யும் டெண்டர் விதிமுறைகளை, மீறியதாக தனியார்  நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் தாலி க்கு தங்கம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் எடையுடைய ஒரு லட்சத்து 11 ஆயிரம் தங்க காசுகளை வாங்குவதற்காக 2018 ஜூலை மாதம், தமிழக அரசு டெண்டர் அறிவித்தது. அதில், 22 காரட் தரத்திலான 20 ஆயிரம் காசுகளை வழங்குவதாக கூறி ஒரு தனியார் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றது.

டெண்டர் திறந்து 20 நாட்கள் கழித்தே தேர்ச்சிக்கான கடிதம் கொடுக்கப்பட்டதாலும், தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் இருந்ததாலும், அதற்கேற்ப டெண்டர் தொகையை மாற்றிக்கொடுக்கும்படி அந்த தனியார் நிறுவனம் சமூக நலத்துறைக்கு கடிதம் எழுதியது. விலையில் மாற்றம் செய்ய முடியாவிட்டால் டெண்டர் நடைமுறையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதிக்கும்படியும் அந்த நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததுடன், தனியார் நிறுவனம் செலுத்திய வைப்புத்தொகை 53 லட்ச ரூபாயை சமூக நலத்துறை முடக்கியது.

மேலும், டெண்டர் விதிகளை மீறியதாக கூறி அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தும் சமூக நலத்துறை உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, தனியார் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆனந்த், தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், டி.ரவிச்சந்தர் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பான விவகாரத்தில் நீதித்துறை ஆய்வு என்பது குறுப்பிட்ட வரையரைக்குட்பட்டது. இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை இருந்தால், அதை தீர்க்க சமரச தீர்வாளர்களை நியமித்து தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்த விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில் மாற்று முறைகள் மூலம் தீர்வு காணாமல் மனுதாரர் நீதிமன்றத்தை நாடமுடியாது. இதை தனி நீதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கருப்பு பட்டியலில் சேர் ப்பது குறித்து சமூக நலத்துறை ஆணையர் அளித்த பரிந்துரைக்கு தனியார் நிறுவனம் உரிய நேரத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், அதன்மேல் நடவடி க்கை எடுக்க அரசுக்கு அதி காரம் உள்ளது என்று உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>