சென்னை விமான நிலையத்தில் 3.18 கிலோ தங்கம், ஐபோன்கள் பறிமுதல்: 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது

சென்னை: உள்ளாடைகளில் மறைத்து வைத்து தங்கம், ஐபோன்கள் கடத்திவந்த 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஃபிளை துபாய், எமிரேட்ஸ், ஏர் இந்தியா விமானம் மற்றும் சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா ஆகிய 4 விமானங்கள் வந்தன. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். சென்னையை சேர்ந்த 2 பெண் பயணிகள், ராமநாதபுரம், ஆந்திராவை சேர்ந்த 4 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில் அவர்களது உள்ளாடைகளில் தங்க செயின்கள், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

6 பேரிடம் இருந்தும் 2.67 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். சூட்கேசில், 14 ஐபோன்கள், 8 லேப்டாப் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.40 கோடி. இதையடுத்து 2 பெண்கள் உள்பட 6 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் துபாய், சார்ஜாவில் இருந்து எமிரேட்ஸ், ஏர்அரேபியா ஆகிய விமானங்களில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 ஆண் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது உள்ளாடைகளில் இருந்து 466 கிராம் தங்கப்பசை, 45 கிராம் தங்க செயின் என மொத்தம் 511 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.23.53 லட்சம். 2 பயணிகளையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>