கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது

ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடந்து வரும் நிலையில் 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அணு உலைகளின் பாதுகாப்பிற்காக வளாகத்தை சுற்றிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு நீர் குழாய் வழியாக அத்துமீறி நுழைந்த ஒருவரை மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில்  தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் சுனாமி காலனியை சேர்ந்த அலங்காரராஜ் (55) என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடலோரமாக நடந்து வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு நீர் குழாய் வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: