×

கொரோனாவுக்கு பின் சூடுபிடிக்கும் விற்பனை செம ருசியாக தயாராகுது செட்டிநாட்டு பலகாரங்கள்

காரைக்குடி: தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்வதற்காக, காரைக்குடியில் பலகாரங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தீபாவளி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தொற்றிக்கொள்ளும். புத்தாடை வாங்குவது, பலகாரங்கள் செய்வது என பண்டிகையை வரவேற்க தயாராகி வருகின்றனர். முன்பு வீடுகளில் செய்யப்பட்டு வந்த பலகாரங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து கடைகளில் வாங்க துவங்கிவிட்டனர். இதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கோட்டையூர் மற்றும் சுற்றுப்புறங்களில் தயாரிக்கும் செட்டிநாட்டு பலகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. உடலுக்கு தீங்கு இழைக்காத வகையில் தேங்காய் எண்ணெய், நெய், ரீபைன்ட் ஆயில் என உயர்தரமான பொருட்களில் செய்வதால் இங்கு தயாராகும் பலகாரங்களுக்கு தனி சுவை உண்டு.

பலகாரங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கைப்பக்குவமாக அரைத்து தயாரிப்பது, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்துவது கிடையாது என்பதால் தரமும் ருசியும் அதிகமாக இருக்கும். இப்பகுதியில் தேன்குழல் முறுக்கு, 5 முதல் 11 சுற்று வரை கைமுறுக்கு, அதிரசம், பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, மகிழம்பு முறுக்கு, சீடை, சீப்பு சீடை, தட்டை, இனிப்பு சீடை, பிரண்டை முறுக்கு, மாவுருண்டை, ஓலை பக்கோடா என பலவகையான செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது. தவிர தீபாவளி ஸ்பெஷல் மெனுவாக லட்டு, மைசூர்பாகு, பாதுஷா, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பு வகைகளையும் செய்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த பலகாரங்கள் அனுப்பப்படுகிறது. தவிர பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து வாங்கி செல்கின்றனர். இந்த பலகாரங்கள் 3 மாதங்கள் வரை கெட்டு போகாது என கேரண்டியும் தருகின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இதுகுறித்து கோட்டையூர் மெய்யம்மை கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளாக விற்பனை 50 சதவீதம் பாதிக்கப்பட்டது. தற்போது ஓரளவு பாதிப்பு குறைந்ததால் விற்பனை நல்ல முறையில் இருக்கும் என்ற நம்பிக்கையில் பலகாரம் தயாரிக்க துவங்கி உள்ளோம். கடந்த ஆண்டை விட அரிசி, உளுந்து, எண்ணெய் என அனைத்து மூல பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் விற்பனை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு தீபாவளிக்கு விலையை உயர்த்தவில்லை. இதனால் எங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யலாமா என திட்டமிட்டு வருகிறோம்’’ என்றார்.

Tags : After the corona the hot sale is ready to taste Chettinad forts
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...