தாளவாடி மலைப்பகுதியில் லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து சாப்பிடும் காட்டு யானைகள்: ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் தினமும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்கின்றன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆசனூர்  வழியாக கரும்பு லாரிகள் செல்வதால்  சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள் கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து சாப்பிடுகின்றன. நேற்று காலை தமிழக கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரியை அங்கிருந்த பெண்யானை தனது குட்டியுடன் வழிமறித்து நின்றது. யானையை பார்த்தும் ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். யானையைக் கண்டு அஞ்சியபடி கிளீனரும் ஓட்டுநரும்  லாரியிலேயே அமர்ந்து கொண்டனர்.

அப்போது லாரியில் இருந்த கரும்பு கட்டுகளை தும்பிக்கையால் எடுத்து கீழே போட்ட யானை தனது குட்டியுடன் கரும்புதுண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தின்று பசியாறின.யானைகள் லாரியை வழிமறித்து நின்றதால்  வாகனங்கள் சாலையில் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள் யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து யானைகளுக்கு தொந்தரவு செய்தனர். யானையை பார்க்கும் ஆர்வத்தில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த வாகன ஓட்டிகளை சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர். குட்டியுடன் இருக்கும் யானைகள் சில நேரங்களில் துரத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறும்  சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: