×

‘புற்றுநோயை குணப்படுத்தும் எண்ணெய் வேணும்...’பெண் குரலில் பேசி மோசடி: சிக்கினார் நைஜீரிய வாலிபர்: 3.50 லட்சம் இழந்தார் சின்னமனூர் காப்பக உரிமையாளர்

தேனி: புற்றுநோயை குணப்படுத்தும் எண்ணெய் வாங்கி இங்கிலாந்து அனுப்பினால், அதிக லாபம் கிடைக்கும் என சின்னமனூர் காப்பக உரிமையாளரிடம் ஆசைவார்த்தை கூறி, ரூ.3.50 லட்சம் மோசடி செய்த நைஜீரிய வாலிபரை தேனி போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் தெற்குத் தெருவில் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருபவர் ரிதம்பரநந்தா (48). கடந்த மாதம் இவரது செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் இங்கிலாந்தில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், கொள்முதல் மேலாளராக பணிபுரிவதாக அறிமுகமானார். பின்னர் ஒரு நாள் தொடர்பு கொண்ட இங்கிலாந்து பெண், ‘‘மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜோல்ஜென்ஸ்மா பிரசர்வ் என்ற நிறுவனத்தில் புற்றுநோயை குணப்படுத்தும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் மதிப்பு அதிகம். அதை வாங்கி இங்கிலாந்து அனுப்பினால் அதிக விலை கிடைக்கும். புனே நிறுவனத்தில் பணிபுரியும் கருணா என்பவரை தொடர்பு கொண்டு எண்ணெயை வாங்கி, டெல்லி தரப்பரிசோதனை நிலையத்தில் அளித்தால், அவர்கள் பரிசோதனை செய்து ஆயிரம் லிட்டர் வரை ஏற்றுமதி செய்ய அனுமதியளிப்பர். கிடைக்கும் லாபத்தில் பங்குத் தொகை தருவோம்’’ என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய ரிதம்பரநந்தா, புனேயில் கருணாவை சந்தித்து, ரு.3.50 லட்சம் கொடுத்து 2 லிட்டர் எண்ணெய் வாங்கியுள்ளார். பின்னர், டெல்லியில் உள்ள ஹரிசன் என்பவரை சந்தித்து, எண்ணெய் தரப்பரிசோதனை நிறுவனத்தில் பரிசோதனை செய்ய கோரியுள்ளார். அப்போது ஹரிசன் 2 லிட்டர் எண்ணெய் போதாது, 23 லிட்டர் எண்ணெய் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும், 21 லிட்டர் எண்ணெயை வாங்க முடியாத நிலையில் ரிதம்பரநந்தா, தன்னிடம் பேசிய இங்கிலாந்து பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரிதம்பரநந்தா, தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில், ரிதம்பரநந்தாவிடம் பேசியது பெண் இல்லை என்பதும், பெண் குரலில் நைஜீரியாவை சேர்ந்த ஓலாடியான் மேத்யூ (30) என்பவர் பேசியதும் தெரிய வந்தது. இவர், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம், கிழக்கு நளசுபரா பகுதியில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, மகாராஷ்டிரா சென்ற தனிப்படையினர், ஓலாடியான் மேத்யூவை பிடித்து தேனிக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், ஓலாடியான் மேத்யூ பலரை ஏமாற்றியதும், இந்த மோசடியில், புனேவைச் சேர்ந்த கருணா, டெல்லியைச் சேர்ந்த ஹரிசன் உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து நைஜீரியாவை சேர்ந்தவரை சென்னை புழல் சிறையில் நேற்று அடைத்தனர்.



Tags : Cinnamanur , Cinnamanur archives owner loses Rs 3.50 lakh
× RELATED சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்புகளால்...