×

மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர் எனக்கூறி 75 லட்சம் பணம், 20 பவுன் நகை மோசடி: கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவால் மதுரையில் பரபரப்பு

மதுரை: முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் எனக்கூறி ரூ.75 லட்சம் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு மனு அளித்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கே.கே.நகர் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் ஷேக் முகம்மது. இவர் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு நின்ற கலெக்டரின் வாகனம் முன்பாக அமர்ந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:2017ம் ஆண்டு எனக்கு சொந்தமான மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள இடத்தில் வீடு ஒன்றும், தென்காசியில் வணிக வளாகம் ஒன்றும் கட்டவுள்ளதாகவும் வில்லாபுரம் பகுதியில் ஹெர்பல் நிறுவனம் நடத்திவரும் ராஜேஸ்வரி என்பவரிடம் கூறினேன்.

ராஜேஸ்வரி மூலம் அறிமுகமான மதுரை ஹாஜிமார் தெருவை சேர்ந்த இர்பான் மற்றும் அவரது மனைவியான ஷமீம் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் எனவும், அரசு ஒப்பந்ததாரர் எனவும் என்னிடம் கூறினர். மேலும் தங்கள் மகன் ஆர்க்கிடெக்சர் படித்து முடித்துள்ளதால் அவர் மூலமாக பிரமாண்டமாக வீட்டையும், வணிக வளாகத்தையும் கட்டித்தருவதாகவும் கூறினர்.இதனை நம்பி வீடு மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை செய்து தருமாறு கூறினேன். பணிகளை தொடங்குவதற்கு முன் தவணை தொகை எனக்கூறி அடுத்தடுத்து பல தவணைகளில் ரூ.75 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, கட்டிட பணிகளை செய்து தரவில்லை. பணத்தை கேட்டபோது நிதிநெருக்கடி காரணமாக கட்டிடப்பணியை தொடங்கவில்லை என்றும், தனக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் தருவதாகவும் இர்பான் தம்பதியினர் கூறினர்.
அதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, இர்பான் தனது மகளின் திருமணத்திற்கு நகை இல்லை எனக்கூறி 20 பவுன் தங்கநகையை பெற்றார்.

அதையும் திரும்பித் தரவில்லை. என்னிடம் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட இர்பான் தம்பதி மீது நடவடிக்கை கோரி ஜூலை 13ம் தேதி மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு கூறியிருந்தார்.இதனையடுத்து ஷேக் முகம்மது நிருபர்களிடம், ‘‘முன்னாள் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களோடு இருப்பது போல புகைப்படங்களை காட்டியதுடன், அரசு ஒப்பந்ததாரர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இர்பான் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தையும், நகையையும் மீட்டுத்தர வேண்டும் என மனு அளித்துள்ளேன்’’ என்றார்.



Tags : minister ,Cellur Raju ,Dharna ,Madurai , 75 lakh cash, 20 pound jewelery scam claiming to be a supporter of former minister Cellur Raju: Collector's car sits in front of Dharna
× RELATED கூட்டத்திற்கு நடுவே எழுந்துபோனால்...