×

துடைப்பான்கள் தயாரிப்பு, கோழி வளர்ப்பு, பூந்தோட்டம் அமைத்தல் நாகர்கோவில் மாநகராட்சியில் அசத்தும் தூய்மை பணியாளர்கள்: பன்முக தன்மையை வெளிகாட்டும் பெண்கள்

நாகர்கோவில்:  நாகர்கோவில் மாநகராட்சியில் தினமும் சுமார் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள், இருளப்பபுரம் சாலையில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. மலைபோல் குவிந்து கிடக்கும் உரக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களால், அந்த பகுதியில் துர்நாற்றம், புகை மண்டலம் ஏற்பட்டு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவ தொடங்கின. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, இதில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் வகையில் வடசேரி, இந்து கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி மைதானம், வலம்புரிவிளை உரக்கிடங்கு உள்பட 14 இடங்களில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

வார்டு, வாரியாக சேரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட நுண் உரம் செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்படுகிறது. பின்னர் தொட்டியில் காய வைத்து பின்னர் உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு செயலாக்க மையத்திலும் 10 முதல் 15 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ a1 க்கு விற்பனை ஆகிறது. வாழைத் தோட்டம், ரப்பர் தோட்டம், தென்னந்தோப்புகள் உள்ளிட்டவற்றுக்கு டன் கணக்கில் இந்த உரத்தை விவசாயிகள் வாங்கி செல்கிறார்கள். இயற்கையான உரம் என்பதால், விவசாயிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. துப்புரவு பணியாளர்கள் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கி வருகிறார்கள். இவ்வாறு வாங்கி வரும் மக்கும் குப்பைகளை ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி, அவற்றில் இரும்பு துண்டுகள், மேலும் மக்காத கழிவுகள் இருக்கிறதா? என்பதை  பணியாளர்கள் சோதனை செய்கிறார்கள். இரும்பு துண்டுகளை கண்டுபிடிக்க காந்தம் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இரும்பு துண்டுகள், பிளாஸ்டிக்  தொடர்பான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின், அவற்றை அரவை இயந்திரங்களில் செலுத்துகிறார்கள். சுமார் 40 நாட்கள் வரை அதற்கான தொட்டியில் காய வைக்கப்படுகிறது. பின்னர் உரமாக விற்பனை செய்கிறார்கள்.

தவுடு, உமி, சாம்பல் போன்றவை கலந்து, முழுக்க, முழுக்க இயற்கை உரமாக இருப்பதால், விவசாயிகள் அதிகம் வாங்கி செல்கிறார்கள். வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கும் வாங்குகிறார்கள். நுண் உரம் செயலாக்க மையத்தில் விற்பனை செய்யப்படும் தொகையை, அந்தந்த  பகுதிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த செயலாக்க மையத்தில்  பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.இந்த நுண் உரம் செயலாக்க மையம் வந்த பின், தூய்மை பணியாளர்கள் குப்பைகளை மட்டும் சேகரிப்பது இல்லை. உரம் தயாரிப்புடன்,  துடைப்பான்கள் தயாரிப்பு, பூந்தோட்டம் அமைத்தல், கோழி வளர்ப்பு , எக்கோ பிரிக்ஸ் முறையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் கவர்களை அடைத்தல் என பல்வேறு பணிகளை செய்கிறார்கள்.  இதில் அதிகமாக நடப்பது துடைப்பான்கள் உருவாக்கும் பணிகள் ஆகும். நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகைளில் இருந்து தென்னை ஓலைகளை தனியாக பிரிக்கிறார்கள். இவ்வாறு பிரிக்கும் தென்னை ஓலைகளை , வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு செயலாக்க மையத்தில் இருக்கும் பெண்கள், தென்னை ஓலைகளில் இருந்து தென்னங்குச்சிகளை சேகரித்து துடைப்பம் தயாரிக்கிறார்கள். இந்த துடைப்பங்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி நுண் உரம் செயலாக்க மையத்தில் உள்ள உரங்களை பயன்படுத்தி, வலம்புரிவிளை உரக்கிடங்கு நுழைவு வாயில் பகுதியில் சிறிய அளவில் பூந்தோட்டம் அமைத்துள்ளனர். இந்த பூந்தோட்டத்தை அந்த வழியாக செல்பவர்கள் ரசித்து செல்கிறார்கள். தூய்மை பணியாளர்களின் இந்த பணிகளை, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பாராட்டியதுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார ஆய்வாளர்களிடம் வலியுறுத்தி உள்ளார். மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் விஜய சந்திரன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர் குழுவினர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எக்கோ பிரிக்ஸ் இருக்கைகள்
நாகர்கோவில் மாநகர பூங்காவில் எக்கோ பிரிக்ஸ் முறையில் மரங்களை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் பிளாஸ்டிக் கவர்களை வைத்து அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் உள்ளன. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மண்ணில் கிடந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதையும் குறைக்க முடியும் என்பதால் ஆணையர் ஆலோசனையின் பேரில்், நகர் நல அலுவலர் டாக்டர் ஜோசப் சந்திரன் மேற்பார்வையில் இந்த பணிகள் நடக்கின்றன என்று சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தெரிவித்தார். 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சுமார் 250 கிராம் முதல் 350 கிராம் எடை வரையிலான பிளாஸ்டிக் கவர்கள் வைக்கப்படுகின்றன. சாக்லெட் கவர்கள், பாலிதீன் பைகள் உள்பட பல்வேறு வண்ணங்களில் இந்த கவர்கள் இருப்பதால் அவை வெகுவாக கவர்ந்துள்ளன.

கோழிகள் வளர்ப்பு
நுண் உரம் செயலாக்க மையத்தில் கழிவுகள்  அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்ட பின், தொட்டிகளில் காய வைக்கின்றன. அப்போது அதில் ஏராளமான புழுக்கள் இருக்கும். இந்த புழுக்களை உட்கொள்வதற்காக கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகள், வான் கோழிகள், கருப்பு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் குப்பைகளில் உள்ள புழுக்களை உட்கொள்கின்றன. ஈ தொல்லைகளில் இருந்து தப்ப, 90 லிட்டர் தண்ணீர், 5 கிலோ வெல்லம், 2 லிட்டர் தயிர் கொண்டு கரைசல் தயாரித்து ஸ்பிேர ஆக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த கழிவுகளில் ஈக்கள் இருப்பதில்லை.



Tags : Nagercoil Corporation , Wiper Production, Poultry, Gardening Nagercoil Corporation Stunning Cleaners: Women of Diversity
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை