தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை :சோமாட்டோ நிறுவனத்திற்கு எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை : தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சோமாட்டோ  நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு வராததால் விகாஷ் என்ற இளைஞர் அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை என்று சோமாட்டோ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் சோமாட்டோ செயல்படும் பட்சத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என்று விகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாட்டோ நிறுவனமோ இந்தி நமது தேசிய மொழி என்றும் அனைவரும் குறைந்தபட்சம் அதனை தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றும் பதில் அளித்துள்ளது. இந்த கலந்துரையாடலை விகாஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை எதிர்த்து சோமாட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ட்விட்டரில்  #Reject_Zomato, #ZomatoSpeakTamil உட்பட பல ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் சோமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்தி தேசிய மொழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்கள் மூலம் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி, தமிழர்களுக்கு யாரும் இந்தியர்கள் என்று பாடம் நடந்த வேண்டிய அவசியமில்லை என சொமோட்டோ நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை” என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>