×

பயிற்சியில் இந்தியா அபாரம்

துபாய்: இங்கிலாந்து அணியுடனான ஐசிசி உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஐசிசி அகடமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லர் 18 ரன், ராய் 17 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தனர். மலான் 18 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்து 9.2 ஓவரில் 77 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், பேர்ஸ்டோ - லிவிங்ஸ்டோன் 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டோன் 30 ரன் எடுத்து ஷமி வேகத்தில் போல்டானார். பேர்ஸ்டோ 49 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் மொயீன் அலி அதிரடி காட்ட, இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. மொயீன் 43 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, பும்ரா, ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்.அஷ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும், 4 ஓவரில் 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்து ஸ்கோர் வேகத்துக்கு தடை போட்டார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதிகபட்சமாக ராகுல் 70 ரன் (46 பந்து, 7 பவுண்டரி, 3சிக்சர்) விளாசினார். கே.எல்.ராகுல் 51 ரன், ரிஷப் பண்ட் 29 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டேவிட் வில்லி, மார்க் வுட், லிவிங்ஸ்டோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags : India , India excels in training
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...