×

சிறைகள் நவீனமயமாக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க அரசு திட்டம்: கோவையில் அமைச்சர் ரகுபதி தகவல்

கோவை: தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்கவும், மத்திய சிறைகளை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.  கோவை மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று ஆய்வு நடத்தினார். சிறையில் கைதிகள் அடைக்கப்பட்ட பகுதிக்கு சென்ற அவர், பாதுகாப்பு மற்றும் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட வசதிகள் குறித்தும், சிறை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், சிறை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார். கைதிகளின் குடும்பத்தினரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.  இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், எஸ்பி சொந்தாமரை கண்ணன், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:  சிறையில் 10 ஆண்டிற்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கைகள் வந்துள்ளன. இது தொடர்பாக, அரசு ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல நடத்தையுள்ள எந்தவித பிரச்னையிலும் ஈடுபடாத 14 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கியூ பிராஞ்ச் உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் கிடைக்கவேண்டும். இதில் பல்வேறு நிபந்தனைகள், நடைமுறைகள் உள்ளன. தணிக்கை செய்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் முழு முயற்சி எடுத்து வருகிறார்.

கோவையில் சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கலைஞர் அறிவித்தார். செம்மொழி பூங்காவிற்காக கோவை சிறையை  இடமாற்றம் செய்ய திட்டமிடவில்லை. இங்கேயுள்ள இடத்திலேயே புதிய கட்டிடம்  கட்ட முடியும். கோவை சிறை, நவீனமாக்கும் திட்டத்திற்காக பரிசீலனையில் தான்  உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளையும் புதுப்பித்து நவீனமாக்க வேண்டி உள்ளது. நல்ல இடவசதியுடன் புதிய இடங்களில் சிறைகளை அமைக்க வேண்டி உள்ளது. அதிக இட வசதி தேவை. தமிழகத்தில் திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிறை பஜாரில் விற்பனை நடக்கவில்லை. இனி சிறை பஜார் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு ரகுபதி கூறினார்.

Tags : Minister ,Raghupathi ,Coimbatore , Prisons, Coimbatore, Minister Raghupathi, Information
× RELATED பொன்முடி அமைச்சராக தகுதி உடையவர்...