×

மேல்மருவத்தூர் அருகே 7 பேர் கைது: மீனாட்சி அம்மன் சிலையை 1 கோடிக்கு விற்க முயற்சி: கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்

கும்பகோணம்: தொன்மையான மீனாட்சி அம்மன் சிலையை ஒரு கோடிக்கு விற்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்து  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த நபர்களை மடக்கி சோதனை நடத்திய போது அவர்களிடம் தொன்மையான மீனாட்சியம்மன் உலோக சிலை இருந்தது தெரிய வந்தது.  இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கார்த்திக் (29), மூர்த்தி (33),  சுந்தரமூர்த்தி (25), குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43), அப்துல்  ரகுமான் (24) என்பதும், அந்த சிலையை சர்வதேச கும்பல் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு பேரம் பேசி விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  இதைதொடர்ந்து 7 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்து சென்றனர். பின்னர் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை  நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா முன்பு 7 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கும்பகோணம் சிறையில் 7 பேரும் அடைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட இரண்டு சிலைகளையும் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Balamarawatur ,Meenatchi ,Kumbagonam ,Court , Melmaruvathur, arrested
× RELATED மகளிர் உரிமை திட்டம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு