×

ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கோரி வட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

புதுடெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி விவசாய அமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதனால் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 150 இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் கார் தாறுமாறாக ஓடி ஏறியது. இதில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். காரில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நியாயமான முறையில் நடக்க வேண்டுமென்றால் ஒன்றிய இணையமைச்சர் அஜய்மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் தண்டவாளங்களில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வடக்கு ரயில்வே மண்டலத்தில் 150 இடங்களில் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பஞ்சாப்பில் லூதியானா, அமிர்தசரஸ், மோகா, ஜலந்தர், பாட்டியாலா, பெரோஸ்பூர் ஆகிய இடங்களிலும், அரியானாவிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதே போன்று உ.பி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாரதிய கிசான் சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : northern ,Union Minister , Farmers, train strike, struggle
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...