4 பந்தில் 4 விக்கெட்!: அயர்லாந்தின் கர்டிஸ் சாதனை

அபுதாபி: உலக கோப்பை தகுதிச் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று களமிறங்கிய நெதர்லாந்து  20 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.  அதிகபட்சமாக தொடக்க வீரர் பேட்ரிக் மேக்ஸ்வெல் 51 ரன் (47 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். கேப்டன் பீட்டர் சீலார் 21, கோலின் ஏக்கர்மேன், லோகன் வான் பீக் தலா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நெதர்லாந்து இன்னிங்சில் 5 வீரர்கள் டக் அவுட்டாகியது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து வேகப் பந்துவீச்சாளர் கர்டிஸ் கேம்பர் (22 வயது) 10வது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை வேகம் லசித்  மலிங்கா, ஆப்கன் சுழல் ரஷீத்கான் சாதனையை சமன் செய்தார். சர்வதேச டி20 ஆட்டங்களில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய சாதனையை இந்த மூவர் மட்டுமே படைத்துள்ளனர். உள்ளூர் ஆட்டங்களையும் கணக்கில் கொண்டால்  கர்டிஸ்  இந்த சாதனையை புரியும் 7வது வீரர். அவர் 4 ஓவரில் 26 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

மற்றொரு அயர்லாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் அடேர் நேற்று 4 ஓவர் வீசி 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஜோஷ் லிட்டில் 1 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து 15.1 ஓவரில்  3 விக்கெட் மட்டுமே இழந்து 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்காமல் 30* ரன், கேரத் டெலனி 44 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். நெதர்லாந்து தரப்பில் ஃபிரெட் கிளாசன், பிரண்டன் குளோவர், பீட்டர் சீலார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கர்டிஸ் கேம்பர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அயர்லாந்து அணி 2 புள்ளிகள் பெற்றது.

Related Stories: