வெளியுறவு அமைச்சர் திறந்து வைத்தார்: இந்தியா-இஸ்ரேல் உறவை பறைசாற்றும் பூதான் தோட்டத்தில் நினைவு தகடு

ஜெருசலேம்: இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஆழமான உறவை பறைசாற்றக் கூடிய பூதான் தோட்டத்தில் நினைவுத் தகடை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்த அவர் அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இப்பயணத்தில் நேற்று அமைச்சர் ஜெய்சங்கர், ஜெருசலேம் வனப்பகுதியில் உள்ள ‘பூதான் தோட்டத்தில்’ நினைவு தகட்டை திறந்து வைத்தார். ஜெருசலேம் வனத்தில் உள்ள ‘பூதான் தோட்டம்’ இந்திய -இஸ்ரேல் உறவில் அதிகம் பேசப்படாத பகுதியாக இருந்து வருவதை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்திய அறப்போராளியும் மனித உரிமை ஆர்வலருமான வினோபா பாவே, 1951ல் பூமிதான இயக்கத்தை தொடங்கினார்.

பூதான் இயக்கம் எனப்படும் அவ்வியக்கத்தின் மூலம் நிலம் உள்ள பணக்காரர்கள் தாமாக முன்வந்து நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை தானமாக வழங்கச் செய்தார். அவரது சர்வோதயா இயக்கத்தின் முக்கிய தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணன் கடந்த 1958ம் ஆண்டு இஸ்ரேலுக்கு 9 நாள் பயணமாக வந்தார்.

இஸ்ரேலில் கிபுட்ஸ், மோஷாவ் என்ற இரு வேளாண் பண்ணை முறைகளை கையாண்டனர். கிபுட்ஸ் என்ற கூட்டுப்பண்ணை விவசாயத்தில் உற்பத்திக்கான ஆதாரங்கள் சமூகத்துக்குச் சொந்தம். மோஷாவ் என்பது வேளாண் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சொந்தமாக நிலங்களை வைத்துக்கொண்டு அதில் பாடுபடுகிறது. இதைப் பற்றிய புரிதலுக்காக ஜெயபிரகாஷ் நாராயணனைத் தொடர்ந்து, 1960ம் ஆண்டில் சர்வோதயா அமைப்பின் 27 பேர் கொண்ட குழு 6 மாதம் இஸ்ரேலில் தங்கி பல்வேறு விஷயங்களை அறிந்தது.

அவர்கள் இந்தியா திரும்பும் முன்பாக, ஜெருசலேம் வனப்பகுதியில் ‘பூதான் தோட்டம்’ அமைத்தனர். இது இந்தியா - இஸ்ரேலின் நீண்ட கால உறவை பறைசாற்றும் அடையாளமாக இன்றளவும் இருந்து வருவதாக நினைவுத் தகட்டை திறந்து வைத்து அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, 2ம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியில் ஐரோப்பிய யூதர்கள் 60 லட்சம் பேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை நினைவாக வைக்கப்பட்டுள்ள ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: