×

வங்கதேசத்தில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படும்: உள்துறை அமைச்சர் உறுதி

தாக்கா: வங்கதேசத்தில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படும். இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் உறுதி அளித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், முகநூலில் குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறு பரப்பியதாக நேற்று முன்தினம் குமிலா என்ற இடத்தில் நவராத்திரியையொட்டி துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்து கோயில்கள், 60க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் பதட்டமும், வன்முறையும் நாட்டில் பல இடங்களில் பரவியது. உடனே பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் கூறியதாவது: ‘வங்கதேசத்தில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்படும். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு சில சமூக விரோத சக்திகள் மத வன்முறையை தூண்டி விடுகின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையை தூண்டுபவர்களின் கொள்கை வங்கதேசத்தில் வெற்றி பெறாது. வன்முறையாளர்கள் இதுவரை 100 பேருக்கும் மேல் கைதாகியுள்ளனர். 4 வன்முறையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எனவே, நாட்டில் வாழும் சிறுபான்மையினர் கவலைப்பட அவசியமில்லை’. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Bangladesh ,Home Minister , Bangladesh, Religious Reconciliation
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...