×

கருங்கல் ஜல்லி குவாரிகள் இயங்காததால் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: குவாரிகளை திறக்க முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட் குவாரிகள் இயங்காத காரணத்தால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான கட்டுமான தொழில்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் கட்டுமான தொழில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்து கருங்கல் ஜல்லி குவாரிகளை இயக்க ஆவணம் செய்ய வேண்டும். 75 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் மற்றும் 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 50 lakh workers at risk of losing jobs due to non-operation of quarries: Sand truck owners demand first to open quarries
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...