×

தனியார் சொகுசு பஸ் நிறுவனம் ரூ.700 கோடி மோசடி: தஞ்சை கலெக்டரிடம் 200 பேர் புகார் மனு

தஞ்சை: இஸ்லாமியர்களிடம் ரூ.700 கோடி பங்கு தொகையை பெற்று மோசடி செய்துவிட்டதாக தஞ்சையில் தனியார் சொகுசு பஸ் நிறுவனம் மீது தஞ்சை கலெக்டரிடம் 200 பேர் நேற்று புகார் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200 இஸ்லாமியர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ரஹ்மான் நகர், ஜே.எம்.தெருவை சேர்ந்தவர் கமாலுதீன். தஞ்சையில் இவர் நடத்தும் சொகுசு பஸ் நிறுவனத்தில் 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில  நாட்களுக்கு முன், கமாலுதீன் உடல்நலமின்றி இறந்தார். அவரிடம் தொழிலில் பங்குதாரராக சேர்ந்து, ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பங்கு தொகை செலுத்தியுள்ளோம். கமாலுதீன் இறந்ததால் அவரது குடும்பத்தினர் இந்த தொகையை தர மறுக்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக கமாலுதீனிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலுத்தியதற்கு உடன்பாடு பத்திரம் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். பங்கு முதலீடுக்கு லாபத்தொகையையும் கொடுத்து வந்தார். அவர் இறந்த பிறகு லாப தொகை தருவது நின்று விட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, பங்கு தொகை வாங்கியது எங்களுக்கு தெரியாது. எனவே பங்கில் லாபமும் தர முடியாது. பங்கு தொகையும் திரும்ப தர முடியாது என கூறிவிட்டனர். 12 ஆயிரம் இஸ்லாமியர்களிடம் இருந்து ரூ.700 கோடி வரை பங்குத் தொகையை பெற்றுதான் கமாலுதீன் தொழில் செய்து வந்தார். தற்போது நாங்கள் பணம் எதுவும் பெறவில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே அவர்களிடம் இருந்து வரவேண்டிய பங்கு தொகையை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Tanjore Collector , Private luxury bus company scam worth Rs 700 crore: 200 lodge complaint with Tanjore Collector
× RELATED மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும்...