தென்மண்டல ஐ.ஜி தலைமையில் 10 மாவட்ட காவலர்களுக்கு மதுரையில் குறைதீர் முகாம்

மதுரை: மதுரையில் 10 மாவட்ட காவல்துறையினருக்கான குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில் 643 பேர் கலந்து கொண்டு தங்களது மனுக்களை தென்மண்டல ஐஜியிடம் கொடுத்தனர்.‘‘உங்கள் துறையில் முதல்வர்’’ திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. தென்மண்டல ஐ.ஜி அன்பு தலைமையில் நடந்த இம்முகாமில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களிலிருந்து காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை 643 பேர் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.

இவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஐ.ஜி அன்பு, ஒவ்வொருவரிடமும் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். இதில் மதுரை எஸ்.பி பாஸ்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பணியிட மாறுதல், குடியிருப்பு வசதி, ஓய்வு மற்றும் விடுமுறை மற்றும் போலீஸ் குடும்பத்தினருக்கான மருத்துவ வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து புகார் மனுக்களில் கூறப்பட்டிருந்தன. குறைதீர் முகாமிலிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பணிமாறுதல் கேட்டு அதிக மனுக்கள் வந்திருந்தன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, காலி இடங்களுக்கேற்ப  பணிமாறுதல் உத்தரவு வழங்கப்படும். தீர்க்க முடியாத அல்லது பிரச்னைக்குரிய மனுக்கள் உரிய நடவடிக்கைக்காக டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்படும்’’ என்றார்.

Related Stories:

More
>