சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி

மதுரை: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதம் 8 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி இன்று முதல் 4 நாட்கள் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு அடுத்த தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பக்தர்கள் திரண்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். இரவில் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும், ஓடைகளில் குளிக்கக்கூடாது என கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஐப்பசி பவுர்ணமியான வரும் 20ம் தேதியன்று அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, நாளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சதுரகிரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>