தடுப்பூசி போடாமல் அடம் பிடிக்கும் நடிகைக்கு கொரோனா

பனாஜி: கோவாவில் தடுப்பூசி போடாமல் இருக்கும் நடிகை பூஜா பேடிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பூஜா பேடி, தற்போது ஒப்பந்ததாரர் மானேக் என்பவருடன் கோவாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், பூஜா பேடி வெளியிட்ட வீடியோவில், ‘அனைவருக்கும் வணக்கம்! கொரோனா வைரஸ் இன்னும் ஏன் என்னை தாக்கவில்லை என்று  யோசித்து வந்தேன். எல்லோரையும் தாக்கக்கூடிய இந்த வைரஸ், என்னை தாக்காமல் இதுவரை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது. நான் ஏதோ  அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்தபோது  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

தொற்றில் இருந்து தப்பிக்க தேவையான  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, பலர் தொற்றில் இருந்து மீண்டனர். அதனால், எனக்கும் தொற்று வந்துவிட்டு சென்றுவிடும் என்று நம்பினேன். நோய் எதிர்ப்பு சக்திக்காக சில வழிமுறைகளை பின்பற்றினேன். அதனால், நான் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல் இருப்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதற்காக மற்றவர்களை நான் கட்டுப்படுத்த முடியாது. தற்போது எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கூட, நான் இயற்கையாக  நோய் எதிர்ப்பு சக்தியை பெறவே முயற்சித்து வருகிறேன்.

எனக்கு மட்டும் அல்ல என் வருங்கால கணவர், எங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன். இயற்கையான முறையில் குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள். தயவு செய்து பயப்பட வேண்டாம்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>