×

தமிழகத்தில் அரசு பணியாளர்களின் வேலைநிறுத்தம், தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய அரசுக்கு எதிராக கடந்த 2016, 2017, 2019ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகினர்.

இந்நிலையில் பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தமாறு விடுத்த கோரிக்கை ஏற்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுவதாக தலைமை செயலர் வெ.இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார்.

மேலும் வேலைநிறுத்த போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிக பணிநீக்க காலமும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுவதாகவும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிககி மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பழைய இடத்திற்கே பணியமர்த்தும் வகையில் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Commission ,Tamil Nadu , Government employee
× RELATED வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில்...