×

சாய்ந்து நிற்கும் கண்காணிப்பு கோபுரம்: வேளாங்கண்ணி செல்லும் சுற்றுலா பயணிகளே உஷார்!

நாகை: வேளாங்கண்ணியில் கடல் அரிப்பால் சுற்றுலா பயணிகளை உயிர்பலி வாங்க கண்காணிப்பு கோபுரம் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள பழமையான சிறப்பு மிக்க பகுதிகளை அதன் பழமை மாறாமல் அழகுப்படுத்தி பாதுகாப்புடன் பராமரிக்க மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர், பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஒடிசாவில் உள்ள பூரி, பீகாரில் கயா, குஜராத்தில் துவாரகா, உத்திரபிரதேசத்தில் மதுரா மற்றும் வாரணாசி, கர்நாடகாவில் பாடமி, ஆந்திராவில் அமராவதி, தெலுங்கானா வாரங்கல், தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய 12 நகரங்களை புராதான நகரங்களாக அறிவித்தது.

இதில் வேளாங்கண்ணி மக்களின் வாழ்வாதாரம் உயரவும் அடிப்படை வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்த ரூ.22.06 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. வேளாங்கண்ணிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பல மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பேராலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வேளாங்கண்ணி கடலில் நீராடுவதோடு கடற்கரையில் பொழுது போக்குவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை செல்லும் சாலையில் பல வண்ண சலவை கற்கள் பதிக்கப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கடலில் நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கவும், சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கடற்கரையில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டன. கடந்த சில மாதங்களாக வழக்கத்திற்கு மாறான கடல் சீற்றத்தால் கடற்கரையில் இருந்து 150 அடிக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட சிறிய கடைகள், பொழுதுபோக்கு உபகரணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் கடற்கரையை ஒட்டி கட்டியுள்ள கண்காணிப்பு கோபுரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சாய்ந்த நிலையில் உள்ள அந்த கண்காணிப்பு கோபுரம் எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் சாய்ந்த கண்காணிப்பு கோபுரத்தில் அருகில் நின்றும் ஏறியும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். விபரீதம் நிகழும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து வேளாங்கண்ணியில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறியதாவது: வேளாங்கண்ணியையும், செருதூரையும் பிரிக்கும் வெள்ளையாற்றின் ஒரு பகுதியில் கற்களை கொட்டி தடுப்பு சுவர் எடுக்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணி பகுதியில் 150 மீட்டர் தூரம் கடல் உள் வந்து கடலோரத்தில் இருந்த கடைகளை இழுத்துச் சென்றுள்ளது.

சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்ந்த 30 கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். புனித நகரமான வேளாங்கண்ணியை பாதுகாக்க வலியுறுத்தி அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் பலனில்லை. மழைக்காலத்தில் கடல் சீற்றம் அதிகரித்து அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடனே கடலரிப்பை தடுக்க அரசு கற்கள் கொட்ட வேண்டும் என்றனர்.

Tags : Ushar , Leaning Watch Tower: Tourists visiting Velankanni are on the alert!
× RELATED உள்ளூர் மக்கள் மீது தாக்குதல்கள்;...