×

4 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி; கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் குளித்து உற்சாகம்

சேந்தமங்கலம்: ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறையால், கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்கு செல்ல அடிவாரம் காரவள்ளியிலிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலையில் அரப்பளீஸ்வரர் கோயில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், நம்ம அருவி, மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில், தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், காட்சி முனையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது.

இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. ஆயுத பூஜையையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கொல்லிமலைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிக அளவிலான உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

கொல்லிமலையில் சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளதால், அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். வீடு திரும்பும் போது கொல்லிமலையில் விளையும் அன்னாசி, பலாப்பழம், கொய்யா பழம், மலை வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். இதனால் சோளக்காடு, கோவிலூர், தெம்பளம் அப்பகுதிகளில் உள்ள பழ சந்தையில் கூட்டம் அலைமோதியது.

Tags : Echoes of 4 consecutive days of holidays; Tourists flocking to Kollimalai: Bathing in the waterfalls is exciting
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...