×

ஆண்டிபட்டி அருகே மழைநீர் வரத்து ஓடையை தூர்வாரும் கிராம மக்கள்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் ஊராட்சியில் சித்தையக்கவுண்டன்பட்டி கிராமத்தின் வழியே தேனால் ஓடை செல்கிறது. ஏத்தக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி சுமார் மூன்றரை கிலோ மீட்டர் வரை சென்று பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் சென்று முடிகிறது. இந்த ஓடையில் ஏற்படும் நீர்வரத்தால் ஏத்தக்கோவில், சித்தையக்கவுண்டன்பட்டி, அனுப்பப்பட்டி, பிச்சம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுகிறது.

இந்த ஓடையில் மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது, தண்ணீரை தக்க வைத்து அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில், கடந்த 2005ல் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 12 செக்டேம்கள் அமைக்கப்பட்டது. அதன்பின் பராமரிப்பு இல்லாததால் அனைத்து செக்டேம்களிலும், மணல் குவிந்து கிடக்கிறது. இதனால், மழைக்காலங்களில் செக்டேமை மழைநீர் கடப்பதற்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் 100 அடியில் இருந்து 1200 அடிக்கும் கீழே சென்றது. இந்நிலையில், சித்தையக்கவுண்டன்பட்டி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, வரும் வடகிழக்கு பருவமழையில் ஓடையில் தண்ணீரை தேக்க ஓடையை தூர்வார கிராம மக்களே முடிவு செய்தனர்.

இதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நிதி திரட்ட ஆரம்பித்தனர். தற்போது தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஷியாமாலா நாகராணி என்பவர் தலைமையில், தேனி மாவட்ட நிர்வாகம் உதவியுடன் ஓடை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜேசிபி மற்றும் பொக்லைன் உதவியுடன் அனைத்து செக்டேம் பகுதியில் உள்ள மணல்களை அகற்றி தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக்குழு ஒருகிணைப்பாளர் ஷியாமாலா நாகராணி தெரிவிக்கையில், ‘கிராம மக்கள் அனைவரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, தங்களது பகுதியில் உள்ள தேனால் ஓடையை தூர்வார வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தனர்.

இந்த ஓடையை தூர்வாருவதற்கு சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகும். இந்த பணி முடிந்த பிறகு ஓடையை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்கான தண்ணீர் தேவை பூர்த்தியடையும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் கிராம மக்களின் நலன்கருதி, ஓடையை தூர்வாருவதற்க்கு நிதியுதிவி அளிக்க விரும்புபவர்களும் கிராம மக்களிடம் நேரடியாக நிதியுதவி அளிக்கலாம்’ என்றனர்.

Tags : Andipatti , Villagers clearing rainwater runoff near Andipatti
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...