×

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் இறங்கி இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் அவலம்: தரைப்பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையன் குப்பம் கிராமத்தில் தற்போது ஏரிக்கு மறுகரையில் உள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது வழக்கம். மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தால் ஏரிக்கு முன்பாகவே அடக்கம் செய்வதும் வழக்கம். ஏரிக்கு முன்பு மயானத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருவதால் அடக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையன்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவனேசன் என்பவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய வாணதிரையன் குப்பத்தில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட அரசனடி ஏரியின் உள்ளே இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சென்று மயான கொட்டகைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலை நீடிக்காமல் இருக்க அரசனடி ஏரியில் தரைப்பாலம் அமைக்க பலமுறை கலெக்டரிடம் ஊர் மக்கள் சார்பாக மனு அளித்தும் சட்டமன்ற மனுக்கள் குழுவில் மனு அளிக்கப்பட்டு தரைப்பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை வழங்கப்பட்டது. அது கிடப்பில் உள்ளதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த அரசனடி ஏரி பொன்னேரியில் நிரம்பும் போது அதனுடைய வடிகால் பகுதியாக இருந்து அதிகப்படியான நீர் இந்த அரசனடி ஏரிக்கு வந்து நிரம்பி வெளியேறும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசனடி ஏரி தற்போது பாதி கொள்ளளவை எட்டி உள்ளது இனி வரும் மழைக் காலங்களில் ஏதேனும் இறப்புகள் நேரிட்டால் தங்களால் மயானத்தில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரி நிரம்பியுள்ள நிலையில் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாதபோது ஏரிக்கு முன்பே உள்ள மயானத்தில் புதைக்கப்படும்.

அங்கும் தற்போது ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பதால் அங்கும் புதைக்க முடியவில்லை. ஆகையினால் இந்த ஏரிக்கு தரைப்பாலம் ஒன்று அமைத்துத்தர தற்போதைய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தரைப்பாலம் அமைத்து கொடுத்து சடலங்களை எடுத்துச்செல்ல வழிசெய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jayankondam , It is a pity that the body of a person who went down to the lake near Jayankondam and was taken to the cemetery: People demand to build a ground bridge
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது