×

வரத்து வாரிகள் அடைபட்டுள்ளதால் கனமழையிலும் நிரம்பாத குளங்கள்: அறந்தாங்கி பகுதியில் அவலம்

அறந்தாங்கி: அறந்தாங்கி நகரில் பெய்யும் மழை நீர் செல்லக் கூடிய வடிகால் வாய்க்கால்கள் கடந்த ஆட்சி காலத்தில் அடைக்கப்பட்டதால், நகரில் உள்ள குளங்கள் அனைத்தும் தண்ணீர் நிரம்பாமல் வெறுமனே காட்சியளிக்கும் நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் இருக்கும் வகையில் நகர் முழுதும் குளங்கள் உள்ளன. அருகன்குளம், வண்ணான்குளம், பாப்பான்குளம், சத்திரக்குளம், குட்டைக்குளம், சூரியமூர்த்திகுளம், வெண்ணாவல்குளம் போன்ற குளங்களும், ஈஸ்வரன்குட்டை போன்ற சிறிய நீர்நிலைகளும் அறந்தாங்கி நகரில் உள்ளன.

மழை பெய்யும்போது ஒரு குளம் நிரம்பினால், அந்த குளத்தின் உபரிநீர் அடுத்த குளத்திற்கு செல்லும் வகையில் அப்போது சிறந்த வடிகால் அமைப்பு இருந்தது. இந்த குளங்களில் வெண்ணாவல்குளம் குடிநீருக்காகவும், அருகன்குளம், பாப்பான்குளம், குட்டைக்குளம், வண்ணான்குளம், சூரியமூர்த்திகுளம் ஆகியவற்றில் மக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். அப்போது குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இல்லாமலும், முறையான பராமரிப்பிலும் இருந்து வந்தன. நாளடைவில் அறந்தாங்கி நகராட்சி சார்பில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டபிறகு அறந்தாங்கி நகர மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் நகராட்சி வழங்கும் குழாய் தண்ணீரையே பயன்படுத்தத் தொடங்கினர்.

இதனால் குளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது. இதனால் குளங்களின் பராமரிப்பில் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. இதனால் குளங்கள் பராமரிப்பின்றி தனிநபர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. மேலும் அருகன்குளம் உள்ளிட்ட சில குளங்களில் அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டு, அரசால் அப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அறந்தாங்கி நகரில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழை பெய்யும்போது ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி கழிவு நீராக மாறியது.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் நகராட்சி சார்பில் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டன. ஒரு குளத்தின் வடிகால் மற்றொரு குளத்தின் வரத்துவாரியாக உள்ள நிலையில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட வடிகால் வாய்க்கால், ஒரு குளத்தை ஒட்டியுள்ள பகுதியிலும், தண்ணீர் வர ஆரம்பிக்கும் பகுதியிலும் இல்லாமல், இடைப்பட்ட பகுதியில் கட்டப்பட்டது. இதனால் மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுகிறது. ஆனால் மழைநீர் குளத்திற்கு செல்வதற்கு வாய்க்கால் இல்லாததால், வடிகால் வாய்க்காலிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை பெய்யும்போது மழைநீர் வடிகாலில் தேங்கும் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாததால், தாழ்வான பகுதிகளில் சென்று சேர்கிறது.

இவ்வாறு தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களை கடிப்பதால் அவர்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அறந்தாங்கி நகரில் பலத்த மழை பெய்த போதிலும், நகரில் உள்ள குளங்கள் தண்ணீரின்றிதான் கிடக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பேய் மழையில் கூட குளங்கள் வறண்டுதான் கிடந்தன. இந்த ஆண்டு பெய்த பலத்த மழையின்போதும் குளங்களுக்கு தண்ணீர் செல்லாததால், குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தண்ணீர் மட்டுமே குளங்களில் கிடக்கின்றன.

அறந்தாங்கி நகரில் உள்ள குளங்களில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் இருப்பு இல்லாததால், நகரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதோடு, பூமியின் ஈரப்பதம் குறைந்ததால், பல கட்டிடங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Aranthangi , Pools not filled with heavy rains due to blockage of irrigation canals: Disgrace in Aranthangi area
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு