×

இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம்: அவசர தேவைக்கு புகார் அளிக்க முடியாத அவலம்

வில்லியனூர்: புதுச்சேரியில் மகளிர் தொடர்பான புகார்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டு வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் நேரு வீதியில் இயங்கி வருகிறது. தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் வில்லியனூர் பகுதியில் இயங்கி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு வில்லியனூர் பகுதியில் துவங்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 மகளிர் ஏட்டுகள், 5 மகளிர் காவலர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 மகளிர் ஏட்டுகள், 5 மகளிர் காவலர்கள், 2 பெண் ஊர்க்காவல் படை வீரர்கள், ஒரு ஆண் ஊர்க்காவல் படை வீரர் என 11 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த மகளிர் காவல் நிலையம் வில்லியனூர், மங்கலம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, ஊசுடு, உழவர்கரை ஆகிய தொகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதிகளில் மகளிருக்கு எதிராக நடக்கும் வரதட்சணை கொடுமை, கணவன் - மனைவி பிரச்னை, மாமியார் - மருமகள் தகராறு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட உணர்திறன் மிக்க புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

காவல் நிலையத்திற்கு எப்போதும், எந்த நேரத்திலும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரும். எனவேதான் அனைத்து காவல் நிலையங்களும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு, காவலர்களும் தயார் நிலையில் பணியில் இருப்பார்கள். ஆனால், வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தினமும் காலை 8.30 மணிக்கு திறந்து இரவு 8.30 மணிக்கு மூடிவிடுகின்றனர். இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் யாரும் பணியில் இருப்பது கிடையாது. காவல் நிலையத்தில் ஒரு வாக்கி டாக்கி கூட கிடையாது.

இரவு நேரங்களில் பெண்களுக்கு நடக்கும் பிரச்னைகள், குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமை பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க வரும்போது மகளிர் காவல் நிலையம் பூட்டப்பட்டு இருப்பதால், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கு பெண்கள் புகார் அளிக்க செல்கின்றனர். அங்குள்ள காவலர்களோ இரவு நேரங்களில் காவல் நிலையம் வரக்கூடாது, நாளை காலை வந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அவசர உதவிக்கு வரும் பெண்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இதுபோன்ற செயலால் ஒரு சிலர்  மன உளைச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காவலர்கள் பொறுப்பற்ற முறையில் பணியாற்றி வருகின்றனர். எனவே வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு திறமையான காவலர்களை நியமிக்கவும், 24 மணி நேரமும் மகளிர் காவல் நிலையம் திறந்திருக்கவும் உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓராண்டில் 10 வழக்குகள் பதிவு
கடந்த ஓராண்டில் மட்டும் வில்லியனூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் 10 வழக்குகளே பதிவு செய்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் ஏதேனும் வழக்கு தொடர்பாக தகவல் கேட்டால், அதற்கு காவலர்கள் `புகார் குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது, நீங்கள் எஸ்ஐ மேடத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று  கூறி விடுகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் இல்லாததால் அவருக்கு போன் செய்தால் கூட எடுப்பதில்லை.


Tags : All Women Police Station Locked Up At Night: The shame of not being able to report an emergency
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை