தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

கடலூர்: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். கடலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக கடலூர்பகுதியில் உள்ள துணி கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் இந்த பகுதியில் அதிகரித்து காணப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்களை திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

இதனை தடுக்கும் பொருட்டு கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகிலும், கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இதற்காக இந்த இரண்டு இடங்களிலும் தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு அந்த கண்காணிப்பு கோபுரத்தின் மீது சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுவர். கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பர்.இதேபோல் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories:

More
>