×

ஆலமரத்துப்பட்டியில் குப்பை தொட்டியான மழை நீர்வரத்து ஓடை: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே, ஆலமரத்துப்பட்டியில் மழைநீர் வரத்து ஓடையில் குப்பைகளை குவிப்பதால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே, ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் மழைநீர் வரத்து ஓடை உள்ளது. மழை காலங்களில் செங்கமலபட்டி, ஆலமரத்துபட்டியிலிருந்து வெளியேறும் மழைநீர் இந்த ஓடை வழியாக செல்லமநாயக்கன்பட்டி கண்மாய்க்கு சென்றடையும்.

இந்த மழைநீர் ஓடை கடந்த சில மாதங்களாக குப்பை கொட்டும் ஓடையாக மாறி வருகிறது. நீர்வரத்து ஓடை முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. போதிய மழை இல்லாத சூழலில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்ட வழித்தடத்தில், ஊராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டியதாக கூறப்படுகிறது. மழைநீர் செல்லும் வழித்தடத்தை ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுமிடமாக மாற்றியுள்ளது. அதிகளவு குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல இடமின்றி பல மாதங்களாக இந்த ஓடையில் தேங்கி நிற்கிறது. இதில், கொசு உருவாகி சுகாதாரக்கெட்டை உருவாக்குகின்றன. இதனால், கிராமத்தில் உள்ள வடக்கு தெரு மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை
மேற்கொண்டு குப்பைகள் மற்றும் சாக்கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Alamarattupatti ,Panchayat administration , Rainwater drainage stream in Alamarattupatti: Request for action by the Panchayat administration
× RELATED காவிரி குடிநீர் விநியோகம் செய்ய...