தஞ்சை மாவட்ட உறைவாள் விளையாட்டு போட்டி: வென்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

கும்பகோணம்: கும்பகோணத்தில் நடந்த தஞ்சை மாவட்ட அளவிலான உறைவாள் விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்றனர். கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்தில் தஞ்சை மாவட்ட உறைவாள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான உறைவாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. உறைவாள் விளையாட்டு தமிழ் மாநில சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் தேசிய துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இந்த போட்டியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, வல்லம், திருச்சிற்றம்பலம், ஆடுதுறை, அணைக்கரை, திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 11, 14, 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஊட்டியில் நடைபெற உள்ள மாநில அளவிலான உறைவாள் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த போட்டிக்கு மாவட்ட நடுவர்களான செல்வம், அபிஷேக், ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, ஷேக் அப்துல்லாஹ் கரிம்கான், சார்லி, பெரியசாமி, ஸ்ரீதர், குணாளன், நிரஞ்சன், தீனதயாளன், சஞ்சய் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.

Related Stories:

More