ஆன்லைன் கேமால் தொடரும் உயிரிழப்புகள்!: புதுக்கோட்டை அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகனான அருண், சேலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு முடித்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. நண்பர்கள், உறவினர்களிடம் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.

மொத்த பணத்தையும் அதில் இழந்துவிட்ட நிலையில், அருண் யாருக்கும் திருப்பி கொடுக்க முடியாமல் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து செம்பட்டி விடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த வாரம் வாணியம்பாடியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் ரம்மியால் தற்கொலை தொடர்கதையாகி வருவதால் அப்பகுதியினர் சோகமடைந்துள்ளனர்.

Related Stories:

More