×

பழைய சாலைகளை பெயர்த்து எடுக்காமல் புதிய சாலை பணி மேற்கொண்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளை பெயர்த்து எடுக்காமல் புதிய  சாலை பணிகளை மேற்கொண்டால், ‘1913’ என்ற புகார் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், என தலைமை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னையில் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும், சாலை பணிகளை மேற்கொள்ளும்போது,  பழைய சாலைகளை முழுவதுமாக பெயர்த்து எடுத்துவிட்டு, புதிய சாலை பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் சாலை உயரமாவது தடுக்கப்படுவதுடன், சாலையோரமுள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ மழை காலங்களில் நீர் புகாமல் தடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளை பெயர்த்து எடுக்காமல், புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் ‘1913’ என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், என்றார். முன்னதாக சென்னை மாநகராட்சி,  அடையாறு மண்டலம், 172வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு பூங்காவில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் 175 வார்டில் சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா பணிகளையு தலைமை செயலாளர்  வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை  ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), சினேகா (கல்வி) வட்டார துணை ஆணையர் (தெற்கு) சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், தலைமை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Secretary , Old Road, Road Work, Public, Complaint, Chief Secretary, Notice
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி