×

பண்ருட்டி அருகே பரபரப்பு மணல் கடத்தல் தடுத்த போலீஸ் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவருக்கு வலை

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்படி காடாம்புலியூர் போலீசார் நேற்று அதிகாலை அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்மாம்பட்டு- புதுப்பாளையம் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியை சோதனை செய்வதற்காக போலீசார் கைகாட்டி நிறுத்தினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் அவர்களைத் தாண்டி வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.  போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்த லாரி ஓட்டுநரும் லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.

போலீசாரும் விடாமல் அந்த லாரியை துரத்திச் சென்றனர். போலீசார் லாரியை பின் தொடர்ந்து வருவதைப் பார்த்த லாரி ஓட்டுனர் ஆத்திரமடைந்து அவர்கள் மீது லாரியை ஏற்றி அவர்களை கீழே தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதில் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த ஏட்டு சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.   

 இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பிச்சென்ற லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். இதனிடையே காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் தாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, லாரி டிரைவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Panruti , Panruti, sand smuggling, police, lorry, attempt to kill
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை