×

நான்காவது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை வெள்ளத்தில் மிதக்கும் குமரி கிராமங்கள்: பள்ளிகளுக்கு விடுமுறை

குலசேகரம்: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த 14ம் தேதி மாலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று 4 வது நாளாக மழை இருந்தது. கடந்த இரு நாட்களாக மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி, அணைகளுக்கு உள்வரத்து நீர் அப்படியே திறந்து விடப்பட்டன. இதனால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு, பரளியாற்றில் வெள்ளம் கரை புரண்டது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்றும் 4 வது நாளாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் கரைபுரண்டது. பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் நிரம்பி, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பிரதான போக்குவரத்து சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. நேற்று முன் தினம் மாலையில் தெரிசனங்கோப்பு சந்திப்பு சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கீரிப்பாறை தரை மட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று காலை முதல் படிப்படியாக தண்ணீர் ஓரளவு குறைந்து, வாகன போக்குவரத்து தொடங்கியது.

குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு செல்லும் சாலையான மணியன்குழி, பொன்னையாகுளம் பகுதிகளில் நேற்றும் 2 வது நாளாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொன்னையாகுளம் பகுதியில் பஸ் நிறுத்தத்தை மூழ்கடிக்கும் வகையில் வெள்ளம் சென்றது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. குழித்துறை சந்திப்பு முதல் வாவுபலி திடல் செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டது. அந்த பகுதியில் உள்ள நர்சரி கார்டன்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவை  வெள்ளத்தில் மூழ்கின. கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. குழித்துறை சப்பாத்து பாலமும் மூழ்கியது. தாமிரபரணி கரையோரம் உள்ள திக்குறிச்சி பகுதியில் செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள், வாழைத்ேதாட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அருவிக்கரை பரளியாற்றிலும் வெள்ளம்  கரைபுரண்டு ஓடியது.கோதையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பாய்ந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

மங்காடு ஆற்றுபாலம் மூழ்கியது :  தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று அதிகாலை மங்காடு  ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது, அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்  பல கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்தது. இதனால், நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் அரசின்  முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலும் மழை விட்டு விட்டு பெய்ததால்,  அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகமாக இருந்தது. இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை மீட்பு படகு மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுலா வருவது போல் குவிந்த மக்கள்: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது ஓடுவதை பார்க்க கார்கள், ஆட்டோக்கள், பைக்குகளில் பொதுமக்கள் திரண்டனர்.

பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி விடாமல் தடுக்கும் வகையில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேடிக்கை பார்க்க திரண்டவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். அருவிக்கரை பரளியாற்றில் , வெள்ளம் கரைபுரண்ட நிலையில் குளிப்பதற்காக சிலர் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆற்றில் இறங்க முயன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பள்ளிகளுக்குஇன்று விடுமுறை: குமரி மாவட் டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை,  சுருளி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. வனத்துறை அனுமதி மறுப்பால்  விடுமுறை தினமான நேற்று அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பிச் சென்றனர்.

கோயில்களில் வெள்ளம் புகுந்தது
பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பதிசாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்  கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. கோயில் பிரகாரத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் காலையில் பக்தர்கள் சிறிது நேரம் அனுமதிக்கப்பட வில்லை. மழை ஓரளவு குறைந்த பின், தண்ணீரை வெளியேற்றும் பணியில் பக்தர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர். இதே போல் திருவட்டார் ஆற்றூர் கல்லுப்பாலம் இசக்கியம்மன் கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கோயிலை மூழ்கடிக்கும் வகையில் வெள்ள நீர் சென்றது.

விளை நிலங்கள் மூழ்கின
தாமிரபரணி, பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்கள், வாழை தோட்டங்கள், வயல் வெளிகள் மூழ்கின. கும்ப பூ சாகுபடிக்கான நடவுகள் பணிகள் முடிந்த வயல் வெளிகளிலும் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணியில் வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு அதிக  நீர்வரத்து உள்ளதால் 2 அணைகளில் இருந்தும் 4,500  கன அடிக்கு  மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இத்துடன் காட்டாற்று பகுதிகளில் இருந்து வரும் நீரும் தாமிரபரணியில் கலப்பதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tags : Heavy rain, flood, Kumari, school, holidays
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...