×

உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர் மீண்டும் இடமாற்றம்

திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க  மறுத்த பெண் டாக்டரை மீண்டும் இடமாற்றம் செய்து சுகாதாரத் துறை இயக்குனரகம்  உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காரத்தொழுவை  சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி (24). பிரசவ சிகிச்சைக்காக உடுமலை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை வயிற்றில் இறந்து விட்டதால்  கடும் வயிற்று வலியுடன் அவதிப்பட்டார். டாக்டர் ஜோதிமணி நான்கு  நாட்களாகியும், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதன்பின்,  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தை  அகற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்  ஜோதி மணியே, தனது தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தது தெரிய  வந்தது. இதுகுறித்து கலெக்டர் வினீத்திடம் புகார் அளிக்கப்பட்டது.  ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. துறைரீதியான நடவடிக்கையாக  டாக்டர் ஜோதிமணி தாராபுரத்துக்கு மாற்றப்பட்டார்.

அவர், பணியில் சேராமல்  காலம் கடத்தி வந்தார். இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர்  பாக்கியலட்சுமி கூறுகையில்,``இடமாற்றம் செய்யப்பட்டும் ஜோதிமணி தாராபுரம்  அரசு மருத்துவமனை பணியில் சேர வில்லை. தற்போது, நீலகிரி மாவட்டம், கூடலூர்  அரசு மருத்துவமனைக்கு மாற்றி சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது அவர்  மீதான ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதிதான்’’ என்றார்.

Tags : Udumalai Government Hospital , Udumalai, Government Hospital, Pregnant, Therapeutic, Female Doctor
× RELATED திருப்பூர் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம்