×

ஜம்மு காஷ்மீரில் வௌிமாநிலங்களை சேர்ந்த மேலும் 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: அடுத்தடுத்து தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்த மேலும் 2 தொழிலாளர்களை தீவிரவாதிகள் நேற்று சுட்டு கொன்றனர். மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தும் இந்த தாக்குதலால், ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக அப்பாவி பொதுமக்களை  தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று வருகின்றனர். பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையை தடுக்கவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பவும், மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தவும் தீவிரவாதிகள் இந்த புதிய யுத்தியை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

கடந்த வாரத்துக்கு முன் இந்து, சீக்கிய ஆசிரியர், தலைமை ஆசிரியை உட்பட உள்ளூரை சேர்ந்த 7 பொதுமக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாலும், பாதுகாப்பு படைகளின் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டதாலும் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் பீகார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பானிப்பூரி விற்பவர் உட்பட 2 வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சோகம் மறைவதற்குள், நேற்று மாலை குல்காம் மாவட்டத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த மேலும் 2 தொழிலாளர்களை சுட்டு கொன்றனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த  தாக்குதலில் மேலும் ஒருவர் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள வான்போ என்ற இடத்தில், வெளிமாநில தொழிலாளர்கள் வாடகை குடிசை வீடுகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை இங்கு நுழைந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை  பார்த்ததும் தொழிலாளர்கள் உயிர் தப்புவதற்காக தப்பியோடி, பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர். சிறிது நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பினர். அந்த பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலால் உள்ளூர், வெளிமாநில மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

முகாமுக்கு மாற்ற அவசர உத்தரவு
ஜம்மு காஷ்மீர் ஐஜி.யான விஜய குமார் நேற்று  அனைத்து மாவட்ட எஸ்பி.க்களுக்கும் அனுப்பிய அவசர செய்தியில், ‘யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் அல்லது துணை ராணுவ படைகளின் முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க வேண்டும். அந்த முகாம்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது மிகவும் அவசரம்...’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Jammu and ,Kashmir , Jammu and Kashmir, outpost, workers, shooting,`
× RELATED ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில்...