அரசியல் எதிரிகளை ஒழிக்க ஏஜென்சிகளை கூலிப்படையாக பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு: சஞ்சய் ராவுத் கடும் தாக்கு

மும்பை:  சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ரக்தோக் என்ற பெயரில் வாராந்திர கட்டுரைகளை எழுதி வருகிறார். சாம்னாவில் நேற்று அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் ஒருவராவது சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். டெல்லியின் அதிகார கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசு ஏஜென்சிகள் இருக்கின்றன.

இவற்றை ஒன்றிய பாஜ அரசு, கூலிப்படையை போலவே பயன்படுத்துகிறது. இதைப்பார்த்தால், மகாராஷ்டிராவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?, ரெய்டுகளின் ஆட்சி நடக்கிறதா? என்று தெரியவில்லை. முன்பு பொய் சொல்லி வந்தவர்கள், தற்போது ரெய்டு நடத்த உத்தரவு பிறப்பிக்கிறார்கள். மூலதனமே இல்லாமல் இப்படி ஒரு தொழிலை அவர்கள் ஆரம்பித்து விட்டனர்.

அரசியல் எதிரிகளை பழிவாங்க, மக்களின் வரிப்பணத்தையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். முன்பு மும்பையில் நிழல் உலக தாதாக்கள் இருந்தபோது கூலிப்படைகள் மூலம் எதிரிகளை பழிவாங்கவும், ஒடுக்கவும் கொலைகள் நடந்தன. இப்போது, அரசியல் எதிரிகளை ஒழிக்க, ஒன்றிய அரசின் புலனாய்வு ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.

Related Stories: