×

பஞ்சாப்பில் காங்கிரசுக்கு புத்துயிர் அளிக்க இதுதான் கடைசி வாய்ப்பு: சோனியா காந்திக்கு சித்து பரபரப்பு கடிதம்

புதுடெல்லி: ‘பஞ்சாப்பில் காங்கிரசுக்கு புத்துயிர் அளிக்கவும், மீட்டெடுக்கவும் இதுவே கடைசி வாய்ப்பு,’ என்று கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சித்து எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரசில் சமீப காலமாக உட்கட்சி பூசலால் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது. தனது கடும் எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தனக்கு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால், இம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகினார். கட்சி தலைமை தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். அதோடு, பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இதனால், அவர் பாஜ.வில் இணைவார் அல்லது புதிய கட்சியை தொடங்கி, பஞ்சாப்பில் பாஜ.வுடன் இணைந்து அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமரீந்தர் பதவி விலகும் முன்பாக தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சித்துவும் பரபரப்பை ஏற்படுத்தினார். இரு  தினங்களுக்கு முன் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,  பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால், 13 முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று, கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு 4 பக்க பரபரப்பு கடிதத்தை சித்து கடந்த 15ம் தேதி எழுதியுள்ளார். அது தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த கடிதத்தில் சித்து, ‘அடுத்தாண்டு நடக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால், 13 முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தி,  தீர்வு காண வேண்டும். பஞ்சாப்பில் தற்போது போதைபொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இது பற்றி விசாரித்து  சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பெரிய மீன்’ உடனடியாக கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசின் 3 கருப்பு வேளாண் சட்டங்களை நிராகரித்து, அவை பஞ்சாப்பில் எந்த நிலையிலும்  அமல்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதியாக அறிவிக்க வேண்டும். தனியார் பங்களிப்புடன் மின்சார கொள்முதல் செய்யப்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள், ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது தவிர, விவசாய வளர்ச்சி, மணல் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 13 பிரச்னையை தீர்ப்பதில் கவனம் செலுத்தும்படி, பஞ்சாப் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பஞ்சாப் காங்கிரசுக்கு புத்துயிர் அளிக்கவும், மீட்டெடுக்கவும் இதுவே கடைசி வாய்ப்பு,’ என்று கூறியுள்ளார்.

* கடந்த வெள்ளிக்கிழமை ராகுலை சந்தித்து பேசும் முன்பாக, இந்த கடிதத்தை சோனியாவுக்கு சித்து எழுதி இருக்கக் கூடும் என தெரிகிறது.
* மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு, சோனியாவிடமும் சித்து நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.

Tags : Congress ,Punjab ,Sidhu ,Sonia Gandhi , Punjab, Congress, Sonia Gandhi, Sidhu
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!