ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் ஏரியில் மூழ்கி 3 வயது குழந்தை சாவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் அடுத்த உமையாள்பரனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். குன்னவாக்கம் பகுதியில் ஜல்லி அரைக்கும் கிரஷர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது பிரதிக்‌ஷா என்ற 3 வயது பெண் குழந்தை நேற்றுமுன்தினம் காலை வீட்டுக்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தது.

திடீரென குழந்தை மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  குழந்தையை யாரும் கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.

 முதற்கட்ட விசாரணையில்  குழந்தை கையில் பாக்கெட்டுடன் ஏரி பக்கம் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை  ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று நினைத்து  ஒரகடம் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடினர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணியை கைவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு நேற்று காலை ஏரியில் தேடினர்.

அப்போது குழந்தையின் சடலம் ஏரியில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை ஏரியில் மூழ்கி இறந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>